திருமலை திருப்பதி கோவிலில், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது குடும்பத்துடன் திருமலை திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். மேலும், அவர் ஒரு நாள் பிரசாத செலவை ஏற்று, 44 லட்சம் ரூபாயை திருமலை திருப்பதி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பதி திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். வேறு மதத்தவர் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார். எனினும், பிற மதத்தவர்கள் பணிபுரிந்தால், அவர்களுக்கு வேறு இடங்களில் வேலை அமர்த்தப்படும் என்றும் கூறினார்.
வெளி மாநிலங்களில் மற்றும் தலைநகரங்களில் திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில்கள் நிறுவப்பட வேண்டும் என பக்தர்கள் விரும்புவதாகவும், அதை கருத்தில் கொண்டு புதிய அறக்கட்டளை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.