பாஜகவில் இணைவதற்கு தனக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் பட்டேலின் உதவியாளர் புகார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போரட்டத்திற்கு ஹர்திக் பட்டேல் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தில் விரைவில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
மேலும், பட்டேல் சமூகத்தினர் பலரையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இதனையடுத்து, ஹர்திக் பட்டேலின் ஆதரவாளர்களாக இருந்த வருண் பட்டேல் மற்றும் ரேஷ்மா பட்டேல் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ஹர்திக் பட்டேலியின் உதவியாளர் நரேந்திர பட்டேல் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து, பாஜகவில் இணைய தன்னிடம் ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டது எனவும், முன் பணமாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.