புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு 283 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டு திட்ட மதிப்பு ரூ.1250 கோடி ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள புராதானமான நாடாளுமன்றம் அருகிலேயே அதிநவீன புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் ராஷ்ட்ரபதி பவனுக்கு அருகில் சுமார் 13 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
புதிய கட்டடத்தில் மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் இருக்கும். ரூ. 977 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு 283 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டது.
இது முந்தைய திட்ட மதிப்பை விட 29% அதிகமாகும். இதனால் புதிய நாடாளுமன்றத்திற்கான திட்ட மதிப்பு ரூ.1250 கோடி ஆக அதிகரித்துள்ளது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.