ஆந்திராவில் பெரிய திருப்பதியில் வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது. இது இந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் செல்கிறார்கள். இந்த கோவிலில் இலவச அனுமதி மற்றும் கட்டண வழிபாடு இரண்டும் இருக்கிறது.
இலவச தரிசனத்தில் பக்தர்கள் அதிகமாக இருப்பதால் 2 நாட்கள் கூட காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் இருக்கிறார்கள். அப்படி காத்திருந்து செல்லும் பக்தர்களுக்காக மூன்று வேளையும் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்திலிருந்து அதிகம் பேர் இந்த கோவிலுக்கு செல்கிறார்கள்.
இந்தியாவிலேயே திருப்பதி கோவிலில்தான் அதிக அளவு காணிக்கையும் செலுத்தப்படுகிறது. அதுவே ஆந்திர அரசுக்கு முக்கிய நிதியாக இருக்கிறது. பணம் மட்டுமில்லாமல் நிறைய தங்க நகைகளையும் பலர் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், திருப்பதி கோவில் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சையான செய்திகளும் வெளியாகும்.
சமீபத்தில் கூட நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டிற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொளுப்பு கலக்கப்பட்டதாக பகீர் புகாரை சொன்னார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சை அடங்கியுள்ள நிலையில் தற்போது புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. திருமலையில் வேலை செய்யும் ஊழியர்கள் எல்லோரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பணியில் இருக்கும் இந்து அல்லாத ஊழியர்கள் பற்றி ஆந்திர அரசுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.