நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடிகள் மொத்தமாக ரூ.500 கோடிக்கும் மேல் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தபால் அலுவலகங்கள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடிகள் பரபரப்பாக விற்பனையாகியது. இதுபோக தன்னார்வல அமைப்புகள் பலவும் வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வழங்கினர்.
தற்போது அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடியின் “அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி” பரப்புரையால் சுமார் 30 கோடி தேசியக்கொடிகள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.