மாயமான தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்
2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன்தான் வெற்றி துரைசாமி.
2021 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான என்றாவது ஒருநாள் என்ற திரைப்படத்தையும் வெற்றி துரைசாமி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசா நகரில் இருந்து சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரை சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார்.
சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியும், ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜினின் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆனால் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆற்றின் வேகம் மிக வேகமாக உள்ள காரணத்தால் தேடும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சட்லஜ் நதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க காவல்துறை மூலம் அவர் அறிவித்துள்ளார்.