ஓடும் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில், ஒரு விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் ரயில்மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், சில வெடிகுண்டுகளும் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து விரைவு ரயில் புரி நகருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் சில மர்ம நபர்கள் ரயிலை நோக்கி சரமாரியாக சுட்டதாகவும், துப்பாக்கிக் குண்டுகள் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்ததாகவும், இதனால் பயணிகள் பெரும் அச்சம் அடைந்து கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.
பயணிகளுக்கு யாருக்கும் காயமில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பின்னர் ரயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, குருவி நகரத்துக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் கல் எறிதல் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரயில்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.