விமானத்தில் தண்ணீர் கேட்டதற்கு உணவு கொடுத்து உபசரித்த பணிப்பெண்ணை பாராட்டி இஸ்லாமியர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோரக்பூரில் இருந்து டெல்லி செல்ல ரிஃபாத் ஜவைத் என்னும் இஸ்லாமியர் ஏர் ஆசியா விமானத்தில் பயணம் செய்துள்ளார். ரமலான் காலத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு இருப்பதால் இஃப்தார் உணவாக தண்ணீர் குடிக்க கேபினில் பணி செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். “நீங்கள் ஏன் உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து வந்தீர்கள்? உங்கள் இடத்தில் சென்று அமருங்கள்” என்று சொல்லியுள்ளார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் பாட்டிலுடன் இரண்டு சான்விச்சுகளையும் கொண்டு வந்து கொடுத்து “உங்களுக்கு எது தேவையென்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்” என்று கூறி சென்றிருக்கிறார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த அவர் “எனக்கு தேவைக்கு மேலேயே அவர் கொடுத்துவிட்டார். அவருடைய அன்பான கவனிப்பு என்னை நெகிழ செய்துவிட்டது” என கூறியுள்ளார்.