கேரளாவுக்கு சென்ற கர்நாடக முதல்வரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த வீடியோவை பதிவிட்டு பினராயி விஜயனை கேள்வி எழுப்பியுள்ளார் முரளிதர ராவ்.
கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாட்டுக்கு சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வந்த போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவின் காரை மறித்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா காரை போராட்டக்காரர்கள் வழிமறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கேரள பாஜக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதை ரீ ட்வீட் செய்துள்ள பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் “கம்யூனிசத்தின் இரட்டை மனநிலை வெளிப்பட்டுவிட்டது. எதிர்கட்சியாக இருந்தால் ஜனநாயகம் குறித்து பேசுவார்கள். அதிகாரத்தில் இருந்தால் வன்முறையாளர்களை கொண்டு செயல்படுவார்கள். கர்நாடக முதல்வர் கம்யூனிச குண்டர்களால் தாக்கப்பட்டது ஜனநாயகத்தின் கோர முகத்தை காட்டுவதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் எடியூரப்பாவுக்கு சரியான பாதுகாப்பு தராதது ஏன்? என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனை கேள்வி எழுப்பியுள்ளார்.