Publish Date: Tue, 23 Jul 2019 (15:11 IST)
Updated Date: Tue, 23 Jul 2019 (15:11 IST)
காஷ்மீர் பிரச்சனைக் குறித்த ட்ரம்ப்பின் கருத்துக்கு பிரதமர் மோடியே பதிலளிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இப்போது அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ’ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்திய பிரதமர் மோடி என்னிடம் ஜி20 மாநாட்டில் சந்தித்த போது உதவி கேட்டார். அவர் இந்த பிரச்சினையில் மீடியேட்டராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்’ எனக் கூறினார்.
ஆனால் ட்ரம்ப்பின் இந்த கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரவீஷ்குமார் ‘காஷ்மீர் பிரச்சனைத் தொடர்பாக ட்ரம்ப்பிடம் எந்த கோரிக்கையையும் இந்தியா வைக்கவில்லை. இது இருநாட்டிப் பிரச்சனை. எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லாதது’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ட்ரம்ப்பின் கருத்தை வெளியுறவுத்துறை அமைச்சரும் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மாவும், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி ராஜாவும் கேள்வியெழுப்பினர். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடியே பதிலளிக்க வேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டனர்.