ஜல்லிக்கட்டு தொடர்பாக இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இரு அறிக்கைகளை மத்திய அரசு திரும்ப பெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜல்லிகட்டு வேண்டி தமிழகமெங்கும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய போராட்டம், தமிழக அரசு மட்டுமின்றி, மத்திய அரசையும் உலுக்கியது. இதற்கிடையில் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. நேற்று அந்த சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய அரசிடமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2011 மற்றும் 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு அறிக்கைகளை வாபஸ் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது, 2011ம் ஆண்டு காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதை வைத்து 2014ம் ஆண்டு, பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. எனவே, கடந்த 2 வருடங்களாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
தற்போது தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அடுத்து, மத்திய அரசு அந்த 2 அறிக்கைகளையும் திரும்ப பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.