கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நேற்று மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையிம் மாலை 5 மணிக்கு மக்கள் செய்த வேலையால் மருத்துவர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவி உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நேற்று மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது.
மக்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மாலை 5 மணிக்கு கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டிலிருந்தே கைத்தட்ட சொல்லி அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் காலையிலிருந்து வீடுகளுக்குள் அடங்கி கிடந்த மக்கள் மாலை 5 மணிக்கு வெளியே வந்து மேள தாளத்தோடு பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஊர்வலம் சென்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் படலத்தை அரங்கேற்றியுள்ளனர். காலையிலிருந்து வீட்டில் இருக்க சொன்னதே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகதான், ஆனால் மாலையில் எல்லாரும் இப்படி ஒன்றாக கூடி ஆடுவதால் அன்றைய நாள் முழுக்க வீட்டில் அடைந்து கிடந்ததற்கு எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டதாக மருத்துவர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம். மக்களுக்கு இன்னமும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.