நாடு முழுவதும் பணம் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். புதுடெல்லி அருகே ஒரு குடும்பத்தினர் டீ கொடுத்து எளிமையான முறையில் திருமண நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டா அருகே உள்ள மதியா கிராமத்தை சேர்ந்த மகவீர் சிங் மற்றும் மனைவி கியோனா இருவரும் மாற்றுத் திறனாளிகள். இவர்கள் தங்கள் மகளின் திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தினர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பல பேர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வதில் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் மகவீர் சிங், அவரது மகள் திருமணத்துக்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்தார்.
விருந்தினர்களுக்கு திருமணத்தில் டீ மட்டும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு மகவீர் சிங் ஆசிர்வாதம் செய்து அன்பளிப்பாக வெறும் 11 ரூபாய் மட்டும் கொடுத்தார்.
பின்னர் இவர்களின் நிலையை பார்த்த இளைஞர்கள் சிலர் பணம் திரட்டி திருமணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
பணத்தட்டுபாடு சாமானிய மக்களை மட்டுமே பாதித்துள்ளது. பணக்காரர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.