காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய அவசியத்தில் அக்கட்சி தற்போது உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சி என்பதால் அனைத்து மாநில மக்களுக்கும் தெரிந்த ஒரு முகம் தலைவர் பதவிக்கு தேவைப்படுகிறது. பிரியங்கா காந்தியை தலைவராக்கினால் மீண்டும் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் வரும் என்பதாலும், அவர் உத்தரபிரதேச முதல்வர் பதவியை குறிவைத்து அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாலும் பிரியங்கா காந்தியை தலைவராக்க சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் விரும்பவில்லை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் தலையிடப் போவதில்லை என்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கூறிவிட்டதால் சீனியர் தலைவர்கள் சேர்ந்து கட்சித்தலைவருக்கு ஒருசில பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.
அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே , முகுல் வாஸ்னிக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட், உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமராக இருந்தவர் என்பதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்ற வகையில் மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன