சிறுபான்மையினரின் மீதான வன்முறைகள் குறித்து பிரபலங்கள், மோடிக்கு எழுதிய கடிதத்தில் இயக்குனர் மணிரத்னம் கையெழுத்து இடவில்லை என அவரது திரைப்பட குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 24 ஆம் தேதி, இஸ்லாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் பல வருடங்களாக நடத்தப்படும் ஜாதி ரீதியிலான மற்றும் மத ரீதியிலான தாக்குதலை கண்டித்து பிரதமர் மோடிக்கு, இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் அடூர் கோபாலகிருஷணன், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உட்பட 49 பிரபலங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே அந்த கடிதத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கையெழுத்தும் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்து இடவில்லை என அவரது திரைப்பட குழு மறுத்துள்ளது. மேலும் மணிரத்னம், தான் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட வேலைகளில் மும்முரமாக பணியாற்றி கொண்டிருப்பதால், இது போன்ற எந்த கடிதத்திலும் அவர் கையெழுத்து இடவில்லை என அவரது திரைப்பட குழு கூறியுள்ளது. இதனால் அந்த கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்து எப்படி வந்ததென மர்மமாக உள்ளது.
மேலும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான வன்முறை குறித்த பிரபலங்களின் கடிதத்தை மறுத்து, நடிகை கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, இயக்குனர் மதூர் பண்டார்கர் உட்பட 60 பிரபலங்கள் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.