மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில், பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல் காரணமாக 28 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஜால்னாவில் உள்ள ரயில் நிலையத்தின் "சத்ரபதி சம்பாஜிநகர்" பெயர்ப்பலகை அருகே அந்த இளைஞரும் அவரது நண்பரும் சிறுநீர் கழித்த வீடியோ எடுக்கப்பட்டு, உள்ளூர் சிவசேனா மாவட்ட தலைவர் உட்பட பலரால் இன்ஸ்டாகிராமில் பரப்பப்பட்டது.
இந்த செயலுக்காக இருவரும் பொதுமன்னிப்பு கோரிய பின்னரும், இறந்த இளைஞருக்கு மட்டும் தொடர்ந்து தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மிரட்டல்கள் வந்ததாகவும், இதனால் அவர் அவமானம் அடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். தொடர் துன்புறுத்தலால் விரக்தியடைந்த அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, வீடியோவை பரப்பி, துன்புறுத்தலுக்கு தூண்டியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.