தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என மம்தா கட்சியின் எம்பிக்கள் நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியை பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து உள்ளது மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்று மக்கள் பணத்தை முறைகேடு செய்த அதானியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.