கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம் மற்றும் ரசிகர்கள் ரகளை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாமல் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர்; இதை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மமதா பானர்ஜி, "சால்ட் லேக் மைதானத்தில் நடந்த மோசமான ஏற்பாட்டிற்கு நான் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான பொறுப்பை கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம்குமார் ராய் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலர் உள்ளிட்டோர் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மோசமான நிகழ்வுக்காக விளையாட்டு ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்