கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் மனித உடல் எச்சங்கள் ரகசியமாக புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், தாங்களே கொடுத்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி செயற்பாட்டாளர்கள் குழு கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த வழக்கு குறித்த விசாரணையில், புகார்களின் ஓட்டைகள் அம்பலமாகி, சி.என். சின்னையா என்ற போலி புகார்தாரர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறப்புப் புலனாய்வுக் குழு இதுவரை கொலை மற்றும் ரகசிய புதைப்பு குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களை கண்டுபிடிக்கவில்லை. மேலும், மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் தடயவியல் அறிக்கைகளும் புகார்களுக்கு முரண்பாடாக உள்ளன. இதனால், இது ஒரு சதி திட்டத்தின் விளைவாக இருக்கலாம் என்ற கோணத்தில் எஸ்.ஐ.டி. விசாரித்து வருகிறது.
தர்மஸ்தலா கோயில் மீது களங்கம் விளைவிக்க பொய்கள் பரப்பப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தற்போது, பொய்யான தகவல்களை பரப்பியது யார், இதன் பின்னணியில் உள்ள சதி என்ன என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.