மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வரும் 30 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வரும் 30 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் 105 எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய சமாஜ் பக் ஷாவின் ஒரு எம்.எல்.ஏ என ஏற்கனவே பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.
அஜித்பவாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் 24 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்தாலும் பாஜக அரசுக்கு 130 எம்.எல்.ஏக்களின் பலம் மட்டுமே இருக்கும்.
ஆனால் 288 எம்.எல்.ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால், பாஜக - அஜித்பவார் கூட்டணிக்கு மேலும் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.