மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மும்பை நகர போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து விசாரணை நடத்திய போது, அந்த எண்ணின் உரிமையாளர் மாலிக் என்பவர் என தெரியவந்துள்ளது. அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த வாரம் துணை முதல்வர் மற்றும் இயக்குநர் ஒருவரிடம் இருந்து இமெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தகவல் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதலமைச்சருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக, தலைமைச் செயலகத்திலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.