கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!
, புதன், 12 பிப்ரவரி 2025 (10:11 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்னும் 13 நாட்களில் இந்த நிகழ்வு முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடல் நிகழ்ச்சி பிப்ரவரி 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக, சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ் கூறிய போது, கும்பமேளாவுக்கு வரும் மக்கள் அவதிப்படுவதாகவும், உணவு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அது மட்டும் இன்றி, மக்கள் பசியால் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சிலர் பசியால் இறந்துவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கார்களுக்கு பெட்ரோல், டீசல் கூட கிடைப்பதில்லை என்றும், உணவும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை என்றும், உத்தரப் பிரதேச அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அவருடைய குற்றச்சாட்டுக்கு நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேமா மாலினி பதிலடி கொடுத்துள்ளார். மகா கும்பமேளா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு சில பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் அதற்காக எல்லா இடங்களிலும் பிரச்சனை என்று கூற முடியாது.
ஏராளமானோர் ஒரே நேரத்தில் புனித நீராட விரும்புவதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அந்த பகுதியில் மிகவும் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் பாராட்டுகிறார்கள். எனக்கு தெரிந்தவர்கள் மிகவும் வசதியாக திரிவேணி சங்கமத்தில் நீராடியதாகவும் கூறினார்கள். எனவே, கும்பமேளா தோல்வி அடைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்