ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்காக அரசு ஒரு நாளைக்கு ரூ.8 முதல் ரூ.12 வரை செலவழிக்கிறது, ஆனால் மாடுகளின் தீவனத்திற்காக ஒரு நாளைக்கு ரூ.40 ஒதுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்ராந்த் பூரியா எழுப்பிய கேள்விக்கு, மத்திய பிரதேச மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கூறிய தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அரசு செலவினங்கள், எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. அரசு தரவுகளின்படி, தற்போது மாநிலத்தில் 1.36 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். இவர்களில் 29,830 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகவும், 1.06 லட்சம் பேர் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஷியோபூர், தார், கார்கோன், பர்வானி, சிந்த்வாரா மற்றும் பாலகாட் போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பல மாவட்டங்களில், நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாடுகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை விட குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு குறைவாக நிதி ஒதுக்குவதா என காங்கிரஸ் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.