லக்னோவில் 21 வயது பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் காஷ்யப் என்பவர் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், ஆகாஷ் தன்னை ஒரு வருட உறவின்போது பலமுறை தாக்கியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஆகாஷ் ஒரு சைபர் மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதன் மூலம் கிடைத்த பணத்தில் சமீபத்தில் ஒரு ஸ்கார்பியோ எஸ்யூவி வாங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சைபர் குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் அதிகரித்ததால், ஆகாஷுடனான உறவை துண்டித்ததாகவும், அதன் பிறகு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெண் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 12 அதிகாலை 2 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த ஆகாஷ், அந்த பெண்ணை சுட்டு காயப்படுத்தியதோடு, அவரது உறவினரையும் சுட முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் நிலைமை சீராக உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் ஆகாஷ் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.