லக்னோவில் மெட்ரோ ரயில் பயணம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், துவங்கப்பட்ட முதல் நாளே ரயில் பாதியில் நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மெட்ரோ ரெயில் திட்டம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் கொண்டு வரப்பட்டது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கி வைத்தனர்.
இந்த போக்குவரத்து வசதிக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்நிலையில், லக்னோ நகரில் இன்று காலை மெட்ரோ ரயில் தனது முதல் சேவையை தொடங்கியது.
ரயில் ஓடிய முதல் நாளிலேயே பாதி வழியில் நின்றது. இதனால் ஒரு மணி நேரம் ரயிலுக்கு விளக்குகள் மற்றும் மின்சார வசதியின்றி பயணிகள் தவித்துள்ளனர்.
பின்னர், பயணிகள் ரயிலின் முகப்பு வழியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.