வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 13 குழந்தைகளை மீட்டனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷோபா ராணி. இவர் மருத்துவத்துறை ஆர்.எம்.பி.,யாக உள்ளார். இவர் ரூ. 45. 5 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தையை விற்றதாக எழுந்த புகாரில் கடந்த 22-ம் தேதி கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஷோபா ராணியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்ட ஷோபா ராணியின் பின்னணியில் மிகப்பெரிய குழந்தை விற்பனை கும்பல் உள்ளது. இவர்கள் வடமாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களிடம் குழந்தைகளை வாங்கி வந்து ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் டில்லி, மற்றும் பெருநகரங்களிலும் ரூ. 1.8 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் விற்பனை செய்துள்ளனர். இதற்காக 11 பேர் கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
குறிப்பாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளை தேடி பிடித்து அவர்களின் வசதிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து, விற்பனை செய்யப்பட்ட 50 குழந்தைகளில் 13 குழந்தைகளை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தைகளை கடத்தி தென்னிந்தியாவில் சப்ளை செய்த வட இந்தியாவை சேர்ந்த முக்கிய சப்ளையர்கள் ஆன கிரன், ப்ரீத்தி ஆகியோர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்ய தேவையான தீவிர நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.