வயநாடு தொகுதியில் இஸ்லாமிய அமைப்பின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என்றும், இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என்றும், கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஜமாத்-இ-இஸ்லாமிய என்ற அமைப்பு ஆதரவு தருகிறது. மதச்சார்பற்ற கட்சி என்ற விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பை பற்றி நம் நாடு அறியாமல் இல்லை. ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் சித்தாந்தம் ஜனநாயக கருத்துகளுடன் ஒத்துப் போவதில்லை. எந்த விதமான ஜனநாயக ஆட்சியையும் அவர்கள் ஏற்கவில்லை; அதுதான் அவர்கள் சித்தாந்தம்.
இப்போது, காங்கிரஸ் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்புடன் சேர்ந்து நிற்கிறது. மதச்சார்பின்மை பக்கம் நிற்பவர்கள் அனைத்து விதமான மத வெறியையும் எதிர்க்க வேண்டாமா? இஸ்லாமிய ஓட்டை காங்கிரஸ் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.