நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் அலட்சியம் தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் சிங், முகேஷ் சிங், அக்ஷய் குமார் சிங், பவன்குப்தா, வினய் ஷர்மா ஆகியோருடன் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான்
இதில் சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன.
இதன்பிறகு 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். அம்மனுவை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார் அதன் பின்பு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பபப்பட்டது. அதனை குடியரசு தலைவர் நிராகரித்ததால் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”நிர்பயா வழக்கில் ஏற்பட்ட தாமதத்திற்கு டெல்லியின் ஆம் ஆத்மி அரசின் அலட்சியம் தான் காரணம்’ என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் அரவிந்த் கேஜ்ரிவால், “நிர்பயா வழக்கு தொடர்பான எந்த வேலையையும் நாங்கள் ஒரு போதும் தாமதப்படுத்தவில்லை. இதில் டெல்லி அரசுக்கு எந்த பங்கும் இல்லை. நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என செய்தியாளர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.