மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென எடியூரப்பா பிரதமரிடம் வலியுறுத்தினார்.
மேகதாது விவகாரம் பற்றி மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி குழு முறையிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளிப்பாரா அல்லது தமிழகத்தின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து அனுமதி மறுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் இது குறித்து பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன. மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.