கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து அதன் படி, தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தர வலியுறுத்தி கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு 700க்கும் மேற்பட்ட சங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வாடகை கார்களும் லாரிகளும் இயங்கவில்லை. பல இடங்களில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. எனினும் பேருந்துகளும், ஆட்டோக்களும் வழக்கம் போல இயங்குகின்றன. மேலும் கன்னட அமைப்புகள் பேரணியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பதி-மங்களூர் வழி இயக்கப்படும் பேருந்து ஒன்று பாரங்கிபேட்டை சென்றபோது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது.
போராட்டக் குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியாக போராட வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.