டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை சத்தீஸ்கர் காவல்துறையினர், பாஜக அமைச்சரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்துள்ளனர்.
பத்திரிகையாளர் வினோத் வர்மா பிபிசி இந்தி மற்றும் இந்தி நாளேடான அமர் உஜாலிவிலும் பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநில சமூக பிரச்சனைகள் குறித்து நீண்ட காலமாக எழுதி வந்தார். சத்தீஸ்கர் மாநில பாஜக உறுப்பினர் பிரகாஷ் பஜாஜ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வினோத் வர்மா, பாஜக அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் அடங்கிய வீடியோ சிடிக்கள் இருப்பதாக கூறி பணம் பறித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் வினோத் வர்மாவை அவரது வீட்டில் கைது செய்தனர்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல், வினோத் வர்மா எழுதும் செய்திகள் அரசுக்கு ஆத்திரமூட்டியதாகவும், இந்த கைது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். வினோத் வர்மா கைது செய்யப்பட்டதற்கு பல மூத்த பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.