நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தொலைபேசி அழைப்புகள் மற்றும் மொபைல் இணையதள சேவையை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். இது, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
பதிவான புகார்களில், 68% பயனர்கள் 'சிக்னல் இல்லை' என்றும், 16% பேர் 'மொபைல் டேட்டா' பயன்படுத்த முடியவில்லை என்றும், மீதமுள்ள 16% பேர் சேவை முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜியோவின் சேவைத் தடை குறித்து, ஆயிரக்கணக்கான பயனர்கள் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தங்கள் அதிருப்தியையும், நகைச்சுவையையும் வெளிப்படுத்தினர். ஒரு பயனர், "ஜியோ நெட்வொர்க் முடங்கியுள்ளது! பலமுறை போனை ரீஸ்டார்ட் செய்தும், 'சர்வீஸ் இல்லை' என்று காட்டுகிறது" என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், "மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஜியோ சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளன. நெட்வொர்க் முற்றிலும் இல்லை. ஜியோ குழு, தயவுசெய்து விரைவாக இதை சரிசெய்யுங்கள்" என்று கோரிக்கை விடுத்தார்
இது குறித்து ஜியோ தரப்பில், "பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது, சேவைகள் சீராக இயங்குகின்றன" என்று விளக்கம் அளித்துள்ளது.