கேரள மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்...

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (13:05 IST)
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராமின் குடும்பத்தை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ராணுவத்தினரும், மீட்பு பணியினரும் பள்ளமான இடத்தில் வசிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை 164 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர்.
 
இந்நிலையில், வெள்ளத்திலிருந்து தப்பிக்க நடிகர் ஜெயராம், அவரின் மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோர் திருச்சூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, குதிரன் என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஜெயராம் குடும்பத்தினர் வந்த கார் சிக்கிக் கொண்டது. இதுபற்றி வடக்கன்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜெயராம் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு தற்போது காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் குழந்தைக்கு கூட பால் இல்லை ; கேரளாவில் தவிக்கும் குடும்பம் : அதிர்ச்சி வீடியோ