இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலம் முக்கியம் என்றும், கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திக்கு இந்தியாவில் ஒரு மொழி கட்டமைப்பில் முக்கிய இடம் இருந்தாலும், அதை கல்விக்கான பயிற்று மொழியாக திணிக்கக் கூடாது என்று கூறிய ஜெகன் மோகன் ரெட்டி, "கொண்டு வர வேண்டிய மாற்றம் என்பது இந்தியில் அல்ல, ஆங்கிலத்தில் தான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் கல்வியின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும், "நாடு முன்னேற வேண்டும் என்றால், நாடு முழுவதும் உலக மொழியான ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் படிக்கும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி பெறுவது மிகவும் முக்கியம் என்றும், "அரசுப் பள்ளியில் மாற்றம் கொண்டு வந்தால் தான் ஆங்கிலத்தை ஏழைகள் கற்க முடியும்" என்றும், "ஆங்கிலத்தைக் கற்காவிட்டால் அவர்களால் மற்ற மாணவர்களுடன் போட்டி போட முடியாது" என்றும் தெரிவித்தார்.
எனவே, கல்வி நிலையங்களில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பயிற்று மொழியாக ஆங்கிலம் நிலை நிறுத்தப்பட்டு, தாய் மொழியான தெலுங்கு மற்றும் விருப்ப மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், இந்தி மொழியை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர பிரதேச கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிறகே ஜெகன் மோகன் ரெட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.