முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று சிபிஐ –ஆல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக காங்கிரஸ் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ப. சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்ய இருந்த தடையை நீக்கி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் பரவவே நேற்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் தன்விளக்கப் பேட்டி கொடுத்தார். இதனையடுத்து நேற்று அவரது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்வால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘மத்திய பாஜக அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு திரு ப.சிதம்பரம் அவர்களைக் கைது செய்துள்ளது. இந்த ஜனநாயக விரோதச்செயலை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று (22.8.2019) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (22.8.2019) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாகச் சென்று சென்னை அண்ணாசாலையில் நடைபெறும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது
:
ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததை அவமானமாகக் கருதுகிறேன். இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.