சந்திரனை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
சமீபத்தில் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற வி. நாராயணன் சமீபத்தில் நடந்த நிகழ்வில் பேசும்போது, "சந்திரயான்-5 மிஷன், சந்திரயான்-3 போன்று சிறிய ரோவரைக் கொண்டு செல்லாது. இதற்கு பதிலாக, 250 கிலோ எடையுள்ள ஒரு பெரிய ரோவரை அனுப்பி, சந்திரனின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம்.
சந்திராயான் திட்டம் 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அது சந்திரனின் வேதியியல் மற்றும் கனிமவியல் பணிகளை ஆய்வு செய்து முக்கிய தரவுகளை அனுப்பியது. 2019 இல் ஏவப்பட்ட சந்திரயான்-2, 98% வெற்றியை அடைந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் சில சிக்கல்களால் முழுமையான வெற்றி பெற முடியவில்லை. அதனினும், அதன் மேம்பட்ட கேமரா இன்று வரை ஆயிரக்கணக்கான படங்களை அனுப்பி வருகிறது.
2023 ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது, இதன்மூலம் திட்டம் முழுமையாக நிறைவு பெற்றது. இதன் தொடர்ச்சியாக, 2027 ஆம் ஆண்டில் சந்திரயான்-4 திட்டம் நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், "3 நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது. இது ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்" என நாராயணன் தெரிவித்தார்.