சென்னை ஐஐடி இஸ்ரோவுடன் இணைந்து நவீன வகை செமிகண்டக்டர் சிப் உருவாக்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி குறிப்பிட்டதாவது:
சென்னை ஐஐடி கணினி அறிவியல், பொறியியல் துறையின் பிரதாப் சுப்பிரமணியம் எண்ம நுண்ணறிவு - பாதுகாப்பான வன்பொருள் கட்டடக்கலை மையத்தில், ஐஐடி இயக்குநர் வி. காமகோடி தலைமையில் சக்தி மைக்ரோபிராசசர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளித் தரத்தில் செமிகண்டக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் முயற்சியை நாட்டிற்கு முக்கியமானதாக மாற்றும் நடவடிக்கையின் பலனாக, இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
ஐஐஎஸ்யு என அழைக்கப்படும் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் இன்னேஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டில் உருவாக்கப்பட்டு, சென்னை ஐஐடி மூலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. எஸ்சிஎல் என அழைக்கப்படும் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு, கர்நாடகாவின் பெஜேனைஹள்ளியில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மூலம் தொகுக்கப்பட்டது.
குஜராத்தின் பிசிபி பவர் நிறுவனம் தயாரித்த மதர்போர்டு பிசிபி (பிரிண்டெட் சர்க்யூட் போர்டு), சென்னையின் சிர்மா எஸ்ஜிஎஸ் நிறுவனத்தில் அசெம்பிள் செய்யப்பட்டு பின்னர், சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் இணைக்கப்பட்டு சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பூட் செய்யப்பட்டது.