IRCTC தனது ஐந்தாவது "ஸ்ரீ ராமாயண யாத்திரை" டீலக்ஸ் ரயில் பயணத்தை ஜூலை 25, 2025 அன்று தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 17 நாள் ஆன்மீகப் பயணத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள ராமருடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட முக்கியமான தலங்களை பக்தர்கள் சுற்றிப்பார்க்க முடியும்.
இந்த புனிதப் பயணம் டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் தொடங்குகிறது. முதல் நிறுத்தமாக அயோத்திக்கு செல்லும் பயணிகள், அங்குள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில், ஹனுமான் கர்ஹி மற்றும் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள ராம் கி பைடி ஆகிய இடங்களை பார்வையிடுவார்கள்.
பயணத்தில் உள்ள மற்ற முக்கிய இடங்கள் பின்வருமாறு:
நந்திகிராம்: இங்குள்ள பாரத் மந்திரை தரிசிக்கலாம்.
சீதாமர்ஹி மற்றும் ஜனக்பூர் (நேபாளம்): சீதா தேவியின் பிறந்த இடங்களையும், ராம் ஜானகி கோயிலையும் தரிசிக்கலாம்.
பக்சர்: ராம்ரேகா காட் மற்றும் ராமேஸ்வரநாத் கோயிலுக்குச் செல்லலாம்.
வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அதன் நடைபாதை, துளசி மந்திர், சங்கட் மோச்சன் ஹனுமான் மந்திர் ஆகியவற்றைப் பார்த்து, புகழ்மிக்க கங்கா ஆர்த்தியில் கலந்துகொள்ளலாம்.
பிரயாக்ராஜ், சிருங்கவேர்பூர், சித்ரகூட்: சாலை வழியாகப் பயணம் செய்து, இந்த இடங்களில் இரவு தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாசிக்: திரியம்பகேஷ்வர் கோயில் மற்றும் பஞ்சவடியைக் காணலாம்.
ஹம்பி: அனுமனின் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சநேயா மலை, விட்டலா மற்றும் விருபாக்ஷா கோயில்களை தரிசிக்கலாம்.
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி ஆகியவை இந்தப் பயணத்தில் அடங்கும்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில், 1st AC, 2nd AC மற்றும் 3rd AC என மூன்று வகையான தங்குமிட வசதிகள் உள்ளன. இந்தச் சுற்றுலா ரயில் பயணம், 3 நட்சத்திர ஹோட்டலில் தங்குமிடம், அனைத்து சைவ உணவுகள், சாலை வழியாக போக்குவரத்து, சுற்றுலா இடங்களைப் பார்வையிடுதல், பயணக் காப்பீடு மற்றும் அனுபவம் வாய்ந்த சுற்றுலா மேலாளர்களின் வழிகாட்டுதல் ஆகிய அனைத்தும் அடங்கும். கட்டண விபரம் இதோ:
3 AC: ஒரு நபருக்கு ₹1,17,975
2 AC: ஒரு நபருக்கு ₹1,40,120
1 AC கேபின்: ஒரு நபருக்கு ₹1,66,380
1 AC கூபே: ஒரு நபருக்கு ₹1,79,515
இந்த "ஸ்ரீ ராமாயண யாத்திரை"க்கான முன்பதிவுகள் தற்போது IRCTC இணையதளத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.