கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை காக்க போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பல்வேறு கட்ட பொதுமுடக்கங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வரையிலும் நோய் தொற்றை முழுமையாக ஒழிப்பது கடினம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
எப்போது முழுவதுமாக நோய் தொற்று நீங்கும் என தெரியாமல் மக்கள் பலர் வீடுகளில் முடங்க்யுள்ள நிலையிலும், ஒவ்வொரு நாளும் அனைத்து மக்களையும் பரிசோதித்து, சிகிச்சை வழங்கி வருகின்றனர் மருத்துவர்களும், செவிலியர்களும். நேற்று மருத்துவர்கள் தினத்தை ஒட்டு கொரோனாவிலிருந்து காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பல பிரபலங்கள் நன்றி கூறியிருந்தனர்.
இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. உள்நாட்டு விமான பயணங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மட்டும் 25% டிக்கெட் விலையில் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.