Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் தொற்று: சீன பாரம்பரிய மருந்தை ஊக்குவிக்கும் அரசு

Advertiesment
கொரோனா வைரஸ் தொற்று: சீன பாரம்பரிய மருந்தை ஊக்குவிக்கும் அரசு
, புதன், 1 ஜூலை 2020 (23:04 IST)
கோவிட்-19 நோய்த் தடுப்புக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வரும் இந்த வேளையில், இந்த நோய் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் (TCM) முக்கியத்துவத்தை சீனா முன்னிறுத்தி வருகிறது.

நாட்டில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு வகையில் பாரம்பரிய மருத்துவ முறைகள் கையாளப்பட்டன என்று சமீபத்தில் சீன அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சீன மருத்துவம், உலகில் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மூலிகை கசாயங்கள் முதல் டாய் ச்சியின் அக்குபங்சர் வரை பல வகையான சிகிச்சை முறைகள் இதில் அடங்கியுள்ளன.

இதன் பயன்பாடு குறித்து இணையத்தில் அவ்வப்போது தீவிர விவாதங்கள் இடம் பெறுகிற போதிலும், பல aதலைமுறைகளாக சீனாவில் அது மிகவும் பிரபலமாக உள்ளது.

பாரம்பரிய சீன மருத்துவத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புவதற்கு சீனா முயல்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் சுகாதாரத் துறை நிபுணர்கள், இதன் பயன் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் சீன பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து சிறப்புப் பிரிவு ஒன்று உள்ளது. 2003ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலிருந்து, இந்த மருத்துவ முறையின் பங்களிப்பு குறித்து சீன அரசு ஊடகம் மேன்மைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகிறது.

ஆறு பாரம்பரிய சிகிச்சை முறைகள் கோவிட்-19 சிகிச்சைக்கு என விளம்பரம் செய்யப் படுகின்றன. அதில் ஒன்று லியான்ஹுவா குவிங்வென் - இது 13 மூலிகைகள் கொண்டது. மற்றொன்று ஜின்ஹுவா குவிங்கன். இது 2009ல் பறவைக் காய்ச்சல் பரவிய போது உருவாக்கப்பட்டது. இதில் 12 பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது என சீன பாரம்பரிய மருத்துவத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவை பாதுகாப்பானவை என அறிவிப்பதற்கு முன்பு கடுமையான அறிவியல் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு இது உதவக்கூடும். ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக இது எந்த அளவுக்கு செயல்திறன் மிக்கதாக உள்ளது என்ற கேள்விக்கு முடிவான பதில் இல்லை என்று அமெரிக்க தேசிய சுகாதார நிலையங்கள் அமைப்பு கூறியுள்ளது.+

"பாரம்பரிய சீன மருத்துவத்துக்கு நல்ல ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அதன் பயன்பாட்டை நியாயப்படுத்த முடியாது என்பதுடன், ஆபத்தானவையும் கூட'' என்று பிரிட்டனைச் சேர்ந்த துணை மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியாளர் எட்ஜர்டு எர்னஸ் கூறியதாக Nature சஞ்சிகை சமீபத்தில் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜீ பழங்கால வைத்திய முறைகளின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப் படுகிறது.

இருந்தாலும், சீனாவில் பாரம்பரிய சீன மருத்துவ முறை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. 2020 ஆண்டு இறுதிக்குள் பாரம்பரிய சீன மருத்துவத் துறையின் மதிப்பு 420 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று சீனா அரசுக் கவுன்சில் கடந்த ஆண்டு மதிப்பிட்டுள்ளது.

பழங்கால மருத்துவத்தின் ``தீவிர ஆதரவாளராக'' அதிபர் ஜீ இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இது ``சீன நாகரிகத்தின் பொக்கிஷம்'' என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் உலக ஆரோக்கியப் பிரிவில் மூத்த ஆராய்ச்சி மாணவராக இருக்கும் யான்ஜோங் ஹுவாங், " சீன மக்கள் பாரம்பரிய மருத்துவத்தைவிட இப்போதும் நவீன மருந்துகளையே நாடுகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

பாரம்பரிய சீன மருந்துகள் சிலவற்றில் நச்சுப் பொருட்கள் இருப்பதை சீனாவின் தேசிய உணவு மற்றும் ரசாயன மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த ஆண்டு கண்டறிந்தது.
 
பாரம்பரிய சீன மருத்துவத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பீஜிங் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், சீனாவுக்கு வெளியில் நிறைய பேருக்கு அதுபற்றித் தெரியவில்லை.
 
இதை வெளிநாடுகளில் வளர்ப்பதற்கு, நோய்த் தொற்று சூழலை பயன்படுத்திக் கொள்ள சீனா முயல்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இதை அரசு ஊடகம் மறுத்துள்ளது.

இருந்தபோதிலும், ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதி நாடுகளுக்கு வழக்கமான ரசாயன மருந்துகள் மற்றும் சாதனங்களுடன், பாரம்பரிய சீன மருந்துகளையும் சீனா அனுப்பி வருகிறது. சிகிச்சை அளிக்கும் நிபுணர்களையும் அனுப்பி வருகிறது.

``கோவிட்-19 சிகிச்சையில் `சீன அனுபவத்தை' மற்றும் `சீனாவின் தீர்வை' பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சீன மருத்துவம் பற்றி இன்னும் பல நாடுகள் அறிந்து, புரிந்து கொண்டு பயன்படுத்தட்டும்,'' என்று சீனாவின் தேசிய பாரம்பரிய சீன மருந்துகள் நிர்வாகத் துறையின் துணைத் தலைவர் யு யான்ஹோங் கடந்த மார்ச் மாதம் கூறியுள்ளார்.

பாரம்பரிய சீன மருத்துவத்தை சீனா ஊக்குவிப்பது, மென்மையான அதிகாரத்தை அமல் செய்வது போல உள்ளது என்று திரு. ஹுவாங் கூறுகிறார்.

``கோவிட்-19 நோய்க்கு எதிரான சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவம் செயல்திறன் மிக்கதாக உள்ளது என்று அரசு கூறுவது, சீனாவின் கோவிட் எதிர்ப்பு அணுகுமுறையில் மேலாதிக்கத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை தோல்வி அடைந்துவிட்டதைப் போல தோன்றும் இந்த சமயத்தில் சீனா இப்படி செய்வதாகத் தெரிகிறது'' என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிரிக்க பகுதியில் பாரம்பரிய சீன மருத்துவம் பிரபலமாகி வருகிறது.

சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம், பாரம்பரிய சீன மருத்துவத்தை முறைப்படி அங்கீகரித்ததை அடுத்து, அது சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. சர்வதேச மருத்துவத் துறையினர் இதை கண்டித்துள்ளனர்.

கோவிட்-19 சிகிச்சையில் பாரம்பரிய சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பான எச்சரிக்கைகளை, அதன் ஆங்கிலம் - மற்றும் சீன - மொழி பரிந்துரைகளில் இருந்து நீக்கியதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் மேலும் சர்ச்சையில் சிக்கியது.
 
பாரம்பரிய சீன மருத்துவம் என்பது பல சர்ச்சைகள் கொண்டது. காட்டு விலங்குகள் வர்த்தகத்துடன் இந்தத் துறைக்கு உள்ள தொடர்புகள் குறித்து, கோவிட்-19 நோய்த் தாக்குதல் விவாதிக்க வைத்துள்ளது.
 
கொரோனா வைரஸ் சிகிச்சைக்குக் கரடியின் பித்தப்பை சுரப்பு பவுடர் கொண்ட மருந்தை ஊசி வழியாக செலுத்த பரிந்துரை செய்ததை அடுத்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் விமர்சனத்துக்கு உள்ளானது.

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் செதில்களுக்காகக் கொல்லப்படுவதால் பாங்கோலின்கள், அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. அவற்றின் பயன்பாட்டை அண்மையில் சீனா தடை செய்தது.

ஆனால், பாரம்பரிய சீன மருத்துவப் பொருள்கள் பிரபலம் ஆகி வருவதால், சட்டவிரோதமாக வனவிலங்குகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிக்கும் என்று வன விலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

``அழியும் நிலையில் உள்ள உயிரினங்களுக்கு சில மருத்துவ குணங்கள் உள்ளன என்றாலும், பாரம்பரிய சீன மருத்துவத்தில், அதற்கு மாற்றாகத் தாவர இனங்களைப் பயன்படுத்த வேண்டும்'' என்று சீன மருத்துவத்தின் ஹாங்காங் கல்லூரி பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் மருத்துவர் லிக்சிங் லாவோ, பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாரம்பரிய சீன மருத்துவத்தை ஊக்குவிக்க அரசு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகள், எதிர்விளைவை ஏற்படுத்தியிருப்பதைப் போலத் தெரிகிறது.

மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கு, பாரம்பரிய மருந்து ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப் பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, யுன்னான் மாகாண அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் மக்களின் கோபத்துக்கு ஆளானார்கள்.

மிக சமீபத்தில், பீஜிங் நகர நிர்வாகம் வெளியிட்ட வரைவு ஒழுங்குமுறையின்படி, பாரம்பரிய சீன மருத்துவத்தை "இகழ்வோர்"' மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் கடும் எதிர்வினையை சந்தித்தது.

``அறிவியல் என்பது கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். பாரம்பரிய சீன மருத்துவம் பற்றி கேள்வி கேட்க முடியாது. எனவே, பாரம்பரிய சீன மருந்துகள் என்பவை அறிவியல் கிடையாது'' என்று வெய்போ தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பாரம்பரிய சீன மருத்துவம் ஏற்கப்பட வேண்டுமானால், ``அறிவியல் ஆதாரம் மூலமாக நடக்க வேண்டுமே தவிர, பிரச்சாரத்தின் மூலமாக அல்ல'' என்று மருத்துவர் லாவோ கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் சம்பவம்: ரகுகணேஷை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டதாக தகவல்!