ஒவ்வொரு ஆண்டும் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியாவில் இருந்து அதிக பக்தர்கள் நேபாள நாட்டிற்கு சென்று வரும் நிலையில் இந்த ஆண்டு மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானசரோவர் யாத்திரைக்கு செல்ல்லும் பக்தர்கள் ஒருசில இடங்களில் சாலை வசதி இல்லாததால் சிறிய ரக ஹெலிகாப்டரில் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஒருசில பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஹில்ஸா என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது பக்தர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி முன்னோக்கி சென்றனர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தெரியாமல் பின்னோக்கி சென்றார். இதனால் ஹெலிகாப்டரின் வால்பகுதியில் வேகமாக சுழன்று கொண்டிருந்த விசிறியில் சிக்கி அவரது தலை துண்டானது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பலியான பக்தரின் பெயர் நாகேந்திரகுமார் என்ற 42 வயது மும்பையை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரது வீட்டிற்கு பின்னர் தகவல் கொடுத்தனர். இந்த விபத்து குறித்து நேபாள நாட்டின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்