முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான மீண்டும் பயன்படுத்தக்கூடிய இஸ்ரோவின் முதல் விண்வெளி ஓடம் ஆர்.எல்.வி டிடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் அதனை விண்ணில் செலுத்திய பிறகு வெடித்து சிதறிவிடும். ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி ஓடம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பி வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
திரும்பி பூமிக்கு வரும் இந்த விண்வெளி ஓடத்தை மீண்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த விண்வெளி ஓடம் இப்போது முதல்முறையாக சோதனை முறையில் ஏவப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்வெளி ஓடம் வங்கக் கடலில் வெற்றிகரமாக விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படையினரால், ராக்கெட் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வரும் காலங்களில், இந்த ராக்கெட் இஸ்ரோ ஓடு தளத்தில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 10 முறை விண்ணில் ஏவ பயன்படுத்தக்கூடிய இதனைத் தயாரிப்பதற்கு ரூ.95 கோடி வரை செலவானது. எனினும், எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த விண்வெளி ஓடத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது 10 மடங்கு அளவுக்கு செலவு குறையும்.
ஆர்.எல்.வி டிடி மறுபயன்பாட்டு ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதற்கு, குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.