ஜி20 உச்சி மாநாடு விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவும் பாரத் என பெயர் மாற்றம் செய்ய முஸ்தீபுகளில் உள்ள நிலையில் எதிர்கட்சிகள் இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன.
சமீபத்தில் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து இந்தியா என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்தான் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசு தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “The President of India” (இந்தியாவின் குடியரசு தலைவர்) என்பதற்கு பதிலாக “The President of Bharat” (பாரதத்தின் குடியரசு தலைவர்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுமா? அதற்கான முன்னோட்டம்தான் இந்த மாற்றமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.