அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவர் ஜனவரி 20ஆம் தேதி 47வது அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியா உள்பட பல முக்கிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியேற்பு விழா முடிவிலும் புதிய நிர்வாகத்தினரை சந்தித்து, இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.