சமீபத்தில் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பல புதிய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. சமீபத்தில் இவர் 35 பந்துகளில் 100 ரன்களை அடித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் பேசும்போது “நான் ஐபிஎல் தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மைந்தன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு பின்னால் அவரின் கடினமான உழைப்பு அடங்கியுள்ளது. நீங்கள் எவ்வளவு அதிகம் விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பிரகாசிப்பீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைந்த அரசு விளையாட்டுத் துறைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதனால்தான் புதிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளோம்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K