ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் மிக அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடிய நிலையில், இருபது ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் பராக் 95 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட ராஜஸ்தான் அணி 21 ரன்கள் மட்டுமே சேர்த்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக், தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சாதனைப்படைத்தார். மொயின் அலி வீசிய 13 ஆவது ஓவரில் கடைசி ஐந்து பந்துகளிலும் அதன் பிறகு வருண் சக்ரவர்த்தி வீசிய 14 ஆவது ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையும் சிக்ஸருக்க்ப் பறக்கவிட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் வீசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.