மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவரை காண அனுமதிக்கக் கோரிய நோயாளி உறவினர்கள், காத்திருக்குமாறு கூறிய வரவேற்பாளரை அடித்து நொறுக்கி தரையில் போட்டு மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபால் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கோரி, எட்டு முதல் பத்து நபர்களுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, மருத்துவர் வேறு ஒரு நோயாளியை பார்த்து கொண்டிருப்பதாகவும், சில நிமிடங்கள் காத்திருக்குமாறும் வரவேற்பாளர் கூறியுள்ளார்.
இதை கேட்டதும் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், வரவேற்பாளரை சரமாரியாக அடித்து நொறுக்கி, தரையில் போட்டு மிதித்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் உடனடியாக வந்து வரவேற்பாளரை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரவேற்பாளரை தாக்கியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த கொடூரத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.