சபரிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து, பம்பை ஆற்றில் அதிகமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திரிவேணி என்ற பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகமானால் திரிவேணி பகுதியிலும் குளிக்க தடை விதிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பதால், ஐயப்ப பக்தர்கள் மிகவும் கவனமாக யாத்திரை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேர பயணங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதியடையாமல், சன்னிதானத்திற்கு நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.