குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பேருந்து நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மருத்துவ பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் டானிலிம்டா பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் அம்முதியவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை கண்டெடுத்த போலீஸார் அவரது பையில் இருந்த தொடர்பு எண்ணை கொண்டு அவரது குடும்பத்தினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம்தான் அவர் இறந்து விட்டதால் அவரது பிணத்தை தூக்கி வீசியிருக்க வேண்டும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை தரப்பிலோ அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஆபத்துக்குரிய நிலையில் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறிது அறிந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பேருந்து நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.