மும்பையில் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த பழங்குடியின பெண்ணை சாதியின் பெயரால் ராக்கிங் செய்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் இந்தியா முழுக்க பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான பாயல் சல்மான் தத்வி பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி. மும்பையில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக சேர்ந்திருக்கிறார். பாயலை அவரது சாதியின் அடையாளங்களை அவரது கல்லூரி மூத்த மாணவிகள் மூன்று பேர் தொடர்ந்து கேவலமாக பேசி வந்துள்ளனர். மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் பாயல் இணைந்துள்ளார். அந்த குழுவிலும் வந்து அதே போல் கேவலமான வார்த்தைகளால் பாயலை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் கோபமுற்ற பாயல் அவர்களது நடவடிக்கை குறித்த புகார் ஒன்றை கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் நிர்வாகம் அவர்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மேலும் அந்த மாணவிகள் தொடர்ந்து பாயலை அவரது சாதிய அடையாளங்களை கொண்டு தாக்கி பேசி வந்துள்ளனர். இதில் விரக்தியடைந்த பாயல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்வினைகள் எழுந்தன. பலர் பாயலின் சாவுக்கு நீதி கேட்டு ட்விட்டரில் பதிவுகளை இட்டனர். இந்நிலையில் குஜராத் எம்.எல்.ஏவும், சமூக செயல்பாட்டளராகவும் இருக்கும் ஜிக்னேஷ் மேவானி இந்த சம்பவம் குறித்த தனது ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவு செய்தார். அதில் அவர் “நவீன இந்தியாவின் நகரங்களில் சாதிகள் கிடையாவே கிடையாது என்று சொல்பவர்கள் கவனத்திற்கு, இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நகரமான மும்பையில் ஒரு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டாள், அவளுடைய பழங்குடி சாதிய அடையாளத்தை சொல்லி அவளை துன்புறுத்தியதால்.. பாயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.